கொழுப்பு கல்லீரல் பிரச்சினையை இயற்கையாகக் குணமாக்கும் எளிய வழிகள்!
உலகம் முழுவதும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உடல் பருமன், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, நள்ளிரவில் சாப்பிடுவது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளே இதற்கு முதன்மைக் காரணங்களாகும். எந்தவித வலியோ, அறிகுறிகளோ இன்றி கல்லீரல் செல்களுக்குள் கொழுப்பு படிவடிவாகச் சேர்வதை மருத்துவப் பரிசோதனைகள் மூலமே பலரும் கண்டறிகின்றனர்.
குறிப்பாக, நாம் உட்கொள்ளும் குளிர் பானங்கள், பாக்கெட் பழச்சாறுகள் மற்றும் பிஸ்கட்டுகளில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, கல்லீரலில் ஃபிரக்டோஸ் (Fructose) அளவை அதிகரித்து எளிதாகக் கொழுப்பாக மாறிவிடுகிறது.
உணவில் சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதே கல்லீரலைக் குணப்படுத்துவதற்கான முதல் படியாகும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபட விலையுயர்ந்த உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் ஆறு நாட்கள், தினமும் வெறும் 30 நிமிடங்கள் வேகமாக நடந்தாலே (Brisk Walking) கல்லீரலில் உள்ள கொழுப்பு இயற்கையாகக் குறையும் என மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
இதனுடன் யோகா, ஸ்குவாட் மற்றும் புஷ்-அப் போன்ற எளிய பயிற்சிகள் தசைகளை வலுவாக்கி இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகின்றன.
மேலும், போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் காரணமாகச் சுரக்கும் கார்டிசால், இன்சுலின் போன்ற ஹார்மோன் சமநிலையின்மை கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முறையான தூக்கமும் மன அமைதியும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும்.





