ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை
இலங்கையிடம் சொந்தமாகக் கப்பல்கள் இல்லாத காரணத்தினால், ஈரானிடமிருந்து எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெறுவது சாத்தியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24.03.2026) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் தொழில்நுட்பத் திறனும் தற்போது இலங்கையிடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான ஈரான் தூதுவர், ஒரு நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த முன்மொழிவை இலங்கை அரசாங்கம் வரவேற்ற போதிலும், சொந்தமாகக் கப்பல்களைக் கொண்ட நாடுகள் மட்டுமே இவ்வாறான வசதிகளிலிருந்து பயனடைய முடியும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் இந்த வாய்ப்பு இலங்கைக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும். எனினும், முறையான கப்பல் போக்குவரத்து வசதிகள் மற்றும் எரிபொருளைக் கையாளுவதற்கான உட்கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால், இந்த வாய்ப்பை இலங்கை இழந்திருப்பதாகப் தெரிவிக்கப்படுகின்றது.




