ஒரு மின்விளக்கையாவது அணைத்து ஒத்துழைப்போம்! – மின்வெட்டைத் தவிர்க்க அமைச்சர் உருக்கமான வேண்டுகோள்!
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அதனைத் தவிர்ப்பதற்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். “முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்துவிட்டு உங்களால் இயன்ற ஆதரவை வழங்குங்கள்” என அவர் நாட்டு மக்களிடம் உருக்கமாகக் கேட்டுள்ளார்.
இரவு நேரங்களிலேயே மின் உற்பத்திக்கு அதிக எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், அந்தச் சுமை இறுதியில் மக்களுக்கே வந்து சேரும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்வெட்டைச் செய்யுமாறு பல தரப்புகள் பரிந்துரைத்த போதிலும், மக்களுக்குத் தொந்தரவு ஏற்படாத வகையில் மின்சாரத்தை வழங்கவே அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பகல் நேரங்களில் மின்சாரப் பிரச்சினை இல்லை என்றும், இரவில் மட்டும் பிரஜைகளாக நாம் இந்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் வரை மின் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தேவையான போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என கூறியுள்ளார்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிராந்திய ரீதியாகப் பார்த்தால் இலங்கை இதனை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





