இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கண்காட்சி இன்று ஆரம்பம்!
இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சியானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.. இதன்போது சாகசங்ககளும் நிகழ்த்தப்பட்டன.
இந்த கண்காட்சியானது இன்று தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடைபெறும்.
பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும்.
இந்த கண்காட்சி மூலம் பெற்றுக் கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்திற்கும், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் 73ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண அனுசரணையை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப் படை பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஸரல் உதயனீ ராஜபக்ச அவர்களின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.