இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடிய கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி
பாதாள உலகக் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு (Ishara Sewwandi), அவர் தடுப்புக்காவலில் இருந்தபோது பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் துணைக் காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் (F.U. Woodler) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே எவ்விதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள வூட்லர், கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் சிரேஷ்ட காவல்துறை பரிசோதகரால் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“காவல்துறை சேவையின் நேர்மையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதே எமது நோக்கம்” என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது ஊழியர்கள் என்ற ரீதியில், காவல்துறை அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் நெறிமுறைத் தரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





