கருணை என்ற பேச்சுக்கே இடமில்லை : ஈரான் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதாமி கடும் எச்சரிக்கை!
ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் எதிரிகளில் ஒரு தனிநபர் கூட உயிர் பிழைக்கக் கூடாது என ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி இன்று (02.04.2026) வியாழக்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இணையவழியில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் உள்ள தரை, வான் மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு “ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட வேண்டாம்” என்ற நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எதிரிகளின் நடமாட்டங்களை விழிப்புடன் கண்காணித்து, தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரு நிலைகளிலும் இராணுவம் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“ஈரானியர்கள் பாதுகாப்பின்றி வாழும்போது, உலகில் எந்தவொரு பகுதியும் பாதுகாப்பானதாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்த ஹதாமி, எதிரிகளின் நோக்கங்களை ஒருபோதும் அடைய அனுமதிக்கப் போவதில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் பொறுப்பற்ற கருத்துக்கள் ஈரானை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அவர் இதன்போது விமர்சித்தார்.
“ஈரானுக்காக அனைத்தும்” என்ற வழிகாட்டும் கொள்கையின் கீழ், ஆக்கிரமிப்பாளர்களை முழு பலத்துடன் எதிர்கொள்ள ஈரானிய இராணுவம் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போர் அச்சுறுத்தல்கள் முழுமையாக அகற்றப்படும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகளின் விரோதத் திட்டங்களை முறியடிக்க மக்களின் உறுதியான ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும், வெற்றி அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.




