ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் போரினால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், ஈரானிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை ஒரு பகுதியளவில் தளர்த்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது.
இது சர்வதேச அளவில் எரிசக்தித் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் என அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்பு ஈரானிய எண்ணெயைத் தள்ளுபடி விலையில் வாங்கி வந்த சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தளர்த்துவதன் மூலம் ஈரானிய எண்ணெயை இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குத் திசை திருப்ப முடியும் எனவும், இதன் மூலம் சீனாவைச் சந்தை விலையைச் செலுத்த நிர்பந்திக்க முடியும் எனவும் ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கடலில் தேங்கியுள்ள சுமார் 140 மில்லியன் பேரல் ஈரானிய கச்சா எண்ணெய் மீதான விற்பனைக் கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் விலையை அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குக் குறைக்க உதவும் என மதிப்பிடப்பட்டுள்ளது.





