சீனா செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் மே மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்குச் செல்லும் முதலாவது பயணம் இதுவாகும். மார்ச் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தப் பயணம், ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய திகதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஈரான் மீதான தாக்குதலின் போது அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பாதையைத் திறக்க சீனா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பை ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார்.
இந்தப் போர் இன்னும் 4 முதல் 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என வெள்ளை மாளிகை மதிப்பிட்டுள்ளதாலேயே, மே மாதத்தில் இச்சந்திப்புத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வரலாற்றுச் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன; இது ஒரு மாபெரும் நிகழ்வாக அமையும்” என ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டு ட்ரம்பைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தகப் போர் மற்றும் தொழில்நுட்பப் போட்டி நிலவி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
View on Threads





