வெடுக்குநாறி விவகாரத்தால் மீண்டும் இனமுரண்பாடு? டக்ளஸ் தேவானந்தா கடும் எச்சரிக்கை!
வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரமானது இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும், தேவையற்ற நம்பிக்கையீனத்தையும் உருவாக்கும் ஒரு காரணியாக மாறியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரடி கவனம் செலுத்தி, தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் உரிய தீர்வை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி மலைப் பகுதியானது பௌத்த சமயத்திற்குரிய தொல்பொருள் தளம் என்றும், அந்த நிலங்களை எல்லையிட்டு விரைவில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்றும் துறைசார் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பானது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள சூழலிலேயே டக்ளஸ் தேவானந்தா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.




