சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தி அவர்களை சிறையில் அடைப்பதற்காகவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும், அதற்கு பதிலாக அரசியல் பழிவாங்கலிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்து வருவதாகவும், ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை எந்த வகையிலாவது விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், அவர்களை சிறையில் அடைப்பதே அதன் நோக்கம் என ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வெளிப்படையாகவே கூறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நீதித்துறையில் தலையீடு செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பதாகக் கூறிய அவர், அதற்கான தார்மீக உரிமை அரசாங்கத்திற்கு இல்லை என்றும், அவ்வாறான மாற்றம் மேற்கொள்ள வேண்டுமெனில் அது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





