ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள, 51/1 தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கச் செய்வதற்கு உறுப்பு நாடுகள் மத்தியில், இலங்கை அரசாங்கம் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது.
அனுசரணை நாடுகள் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் பேரவையில் இடம்பெறவுள்ளது.
இம்முறை அனுசரணை நாடுகள் குழுவில் அமெரிக்க இடம்பெற்றுள்ளதால், 46/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கிடைத்த 22 வாக்குகளை விட கூடுதல் ஆதரவைப் பெற முடியும் என்று அனுசரணை நாடுகள் நம்புகின்றன.
இந்த நிலையில், இந்த தீர்மானத்தை தோற்கடிக்க முடியாவிட்டாலும், இரட்டை இலக்கங்களில், தீர்மானத்துக்கு எதிரான வாக்குகளைத் திரட்டுவதற்கு ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி சந்திரப் பிரேம கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார்.
தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த திருத்தங்கள் உட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்பதால் அவர், இணை அனுசரணை நாடுகள் நடத்திய மூன்றாவது முறைசாராக் கலந்துரையாடலில் இருந்தும் அவர் வெளிநடப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





