மார்ச் 18 முதல் புதன்கிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை!
எரிபொருள் பாவனையைக் குறைக்கும் நோக்கில், இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை வரும் மார்ச் 18, 2026 முதல் அமுலுக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக, மறு அறிவித்தல் வரை அனைத்து அரச நிகழ்வுகளையும் இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனியார் நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விசேட விடுமுறைத் தீர்மானமானது சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.





