இரவோடு இரவாக இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் அதிரடி தாக்குதல்
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் 21-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் நேற்று (21) இரவு இஸ்ரேலின் தெற்கு நெகேவ் பாலைவனப் பகுதியை இலக்கு வைத்துப் பாரிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேலின் மிக முக்கிய அணு ஆராய்ச்சி மையமான ஷிமோன் பெரெஸ் நெகேவ் (Shimon Peres Negev) தளம் அமைந்துள்ள டிமோனா பகுதியை நோக்கி இந்த ஏவுகணைகள் பாய்ந்துள்ளன.
டிமோனா பகுதிக்கு அருகில் விழுந்து வெடித்த ஏவுகணைகளால் அங்குள்ள கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்புத் தளவாடங்கள் இடைமறித்த போதிலும், அவற்றின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் அணு ஆராய்ச்சி மையத்திற்கு நேரடிப் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும், கதிரியக்கக் கசிவு (Radiation Leak) எதுவும் பதிவாகவில்லை எனவும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே, தமது “True Promise” நடவடிக்கையின் கீழ் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.





