“தாயைக் கொன்றால்தான் நாம் வாழ முடியும்” – விரிவுரையாளர் கொலையில் திடுக்கிடும் வாக்குமூலம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், கடந்த 18ஆம் திகதி அதிகாலை அவரது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை அவரது 19 வயது மகளும், 21 வயது மருமகனும் இணைந்து செய்துள்ளமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
“தாயாரைக் கொலை செய்தால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்” என மகள் கூறிய யோசனையின் பேரில், உறக்கத்தில் இருந்த தாயின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சடலத்தை வீசிவிட்டுப் பால்காய்ச்சிய கொடுமை
கொலையின் பின்னர் சடலத்தை அரியாலை – தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசிவிட்டு, தாயின் நகைகளை அடகு வைத்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் பால்காய்ச்சித் தம்பதிகளாக வாழ ஆரம்பித்த நிலையிலேயே, பொலிஸார் இவர்களைத் துரிதமாகக் கைது செய்துள்ளனர்.
தடயங்களை மறைக்க வீட்டின் சிசிடிவி (CCTV) கருவியின் டிவிஆரை (DVR) அகற்றி நீர்நிலையில் வீசியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளரின் ஏடிஎம் (ATM) அட்டையைப் பயன்படுத்திப் பணம் எடுத்தமை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் (QR) குறியீட்டைப் பயன்படுத்தியபோது தாயின் தொலைபேசிக்குச் சென்ற குறுந்தகவல்கள் மூலம் இவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.
விரிவுரையாளரின் மூத்த மகன் வழங்கிய தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், வவுனியா மற்றும் திருகோணமலைப் பொலிஸார் இணைந்து இந்த ஜோடியைச் சிக்க வைத்துள்ளனர்.




