நண்பனான இலங்கைக்கு எந்த நேரத்திலும் உதவ தயார் : ஈரான் அதிரடி அறிவிப்பு
இலங்கை எமது மிக நெருங்கிய நட்பு நாடு எனவும், எந்த நேரத்திலும் இலங்கைக்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதன் மூலம் இலங்கைக்கு வர வேண்டிய எரிபொருள் கப்பல்களுக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) மாலுமிகளை மீட்டெடுப்பதில் இலங்கை வழங்கிய மனிதாபிமான உதவியை ஈரானியத் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஈரானின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த அந்தத் துரித நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஈரானிய அரசாங்கம் செய்து கொடுக்கும் எனவும் தூதுவர் உறுதியளித்தார்.
இலங்கை இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்வதை ஈரான் ஒருபோதும் விரும்பாது எனவும், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்கத் தாம் காத்திருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.





