ஈரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் இஸ்ரேல் அழிந்திருக்கும்! – ட்ரம்ப் கருத்து
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களும், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களும் ஒன்றுதானா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ட்ரம்ப் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் தமக்கு ரசிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் முற்றிலும் வேறுபட்டவை என விளக்கமளித்துள்ளார்.
ஈரானை கடந்த 47 ஆண்டுகளாக உலகிற்கு அச்சுறுத்தல் தரும் ஒரு “தீய சக்தி” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் ஏராளமான அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்து உலகெங்கிலும் மரணங்களை ஏற்படுத்த விரும்பியது. அவர்களிடம் மட்டும் அணு ஆயுதம் இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே நிரந்தரமாக அகற்றியிருப்பார்கள்” என ட்ரம்ப் ஒரு புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஈரான் மத்திய கிழக்கைக் கைப்பற்றவும், அண்டை நாடுகளைக் கட்டுப்படுத்தவும் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவைத் தவிரச் சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மீதும் ஈரான் எதிர்பாராத தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அமெரிக்கா தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
அணு ஆயுதப் பரவலைத் தடுத்து, இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்தத் தாக்குதல்கள் அவசியம் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.





