மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைச் சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 10-ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள நிலையில், இனி மேலதிக காலம் வழங்கப்படமாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவைத் தவிர, ஏனைய பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை இவ்வாறான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 12 நாட்களுக்குள் விபரங்களை வழங்கத் தவறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வுகாணவும், அரசியல்வாதிகளின் சொத்துக்களின் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் இந்தச் சத்தியக்கடதாசி கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





