மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தயார்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்! எச்சரிக்கும் ட்ரம்ப்
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க – ஈரான் இடையிலான மிக முக்கியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஈரானைத் துவம்சம் செய்ய அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மிக நவீன ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நியூயோர்க் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், “இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த மற்றும் நவீன ஆயுதங்கள் எமது போர்க்கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ளன.
முன்னைய தாக்குதல்களை விட இது மிகவும் வீரியமானதாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
லெபனான் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என ஈரான் விதித்த நிபந்தனைகளைத் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
“ஈரானிடம் தற்போது எந்த துருப்புச் சீட்டும் இல்லை; அவர்கள் உலக நாடுகளை அச்சுறுத்தி மட்டுமே பிழைக்கப் பார்க்கிறார்கள்” எனத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் சாடியுள்ளார்.
குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் மட்டுப்படுத்துவது ஒப்பந்த மீறல் எனவும் அவர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance), “ஈரான் எங்களுடன் விளையாட நினைத்தால் தகுந்த பதிலடி நிச்சயம்” என எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும் என நம்புவதாகவும், ஆனால் ஈரான் தனது அணு ஆயுதக் கனவை கைவிடாவிட்டால் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை மேசையில் தற்போது உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.




