மட்டக்களப்பில் ஆலயம் அருகே புதையல் வேட்டை! ஆலயத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், இரகசியமான முறையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மற்றும் 16 வயது சிறுவன் உட்பட மொத்தம் 9 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களைக் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதில் சம்பந்தப்பட்ட 16 வயது சிறுவனை மட்டும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆலயப் பகுதியில் புதையல் இருப்பதாக நம்பி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





