அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியமாட்டோம் – ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்றும், இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “அமெரிக்கா தனது விருப்பங்களை ஈரானின் மீது திணிக்க முயல்வதோ அல்லது ஈரானைப் பணிய வைக்க முயற்சிப்பதோ ஒருபோதும் வெற்றியடையாது” என அவர் எச்சரித்துள்ளார்.
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் ஈரானின் இறையாண்மை விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறி அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது எவ்வகையில் நியாயம்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் தயாராக இருந்தாலும், அது பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச விதிகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





