800 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் பசு உயிரிழப்பு – வனத்துறையினர் தீவிர விசாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஐயன் தோப்பு கடற்கரையில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று நேற்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
சுமார் 800 கிலோ எடை கொண்ட இந்த கடல் பசு, 230 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்டது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மண்டபம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த கடல் பசுவை மீட்டனர்.
உயிரிழந்த கடல் பசுவின் உடலில் காயங்கள் காணப்படுவதால், மீன்பிடி படகின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு விசிறி தாக்கியதால் இது உயிரிழந்ததா அல்லது வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததா என்பது குறித்து மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பல்லி, கடல் குதிரை என 1400-க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் வாழும் நிலையில், இவ்வாறான கடல் பசுக்களின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கடல் பசுவின் உடல் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டது.





