ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இந்தியத் துணை ஜனாதிபதி சந்திப்பு
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பொதுவான வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து அவர்கள் இடையே ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ், இலங்கையின் நலனுக்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் துணை ஜனாதிபதி இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளில் புதிய மைல்கல்லாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதி அநுர தனது நன்றிகளைத் தெரிவித்தார்.





