இலங்கையில் கனடா குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் – காலியில் அதிர்ச்சிச் சம்பவம்!
கனடாவிலிருந்து சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காலி (Galle) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையின் காலி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த கனடா வாழ் தமிழ்க் குடும்பம் ஒன்றே இந்தத் துயரத்திற்கு ஆளாகியுள்ளது.
கனடாவிலிருந்து வந்த தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் 2 டேப்லெட்கள், 1000 கனடிய டாலர்கள் மற்றும் பல லட்சம் இலங்கை ரூபாய் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த வேளையிலேயே இந்தத் துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது.
விடுதியின் பின்புறம் 4-வது மாடி வரை கட்டப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளின் உதவியுடன் திருடர்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும் உடமைகள் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துக் காலி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர், விடுதிகளில் தங்கும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.




