அநுராதபுரத்தில் கொடூரம்! 10 நாய்கள் விஷம் கொடுத்துக் கொலை
அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் நேற்று (20) ஒரே இடத்தில் 10 நாய்கள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துத் தகவலறிந்த விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
வாயில்லாப் பிராணிகளுக்கு எதிரான இந்தக் கொடூரமான செயலை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
விலங்கு வன்கொடுமைச் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளைத் தாமதமின்றி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், விசாரணை நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Source : JVP News





