Welcome to Jettamil

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்: முக்கிய சூத்திரதாரி வெளிச்சம்!

Share

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்: முக்கிய சூத்திரதாரி வெளிச்சம்!

தாய்லாந்திலிருந்து நாட்டிற்குள் குஷ் மற்றும் ஹாஷ் போன்ற போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 23 தேரர்களையும் மே 12ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகரா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தக் குழுவினர், ஏப்ரல் 25ஆம் தேதி நாட்டிற்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களது பயணப் பைகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொண்ட விசாரணைகளில், இந்தச் செயல்திட்டத்தை அமிதானந்தா என்ற தேரர் திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது. பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள கோவிலில் பதுங்கியிருந்த அவரும் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்தத் தேரர்கள் அனைவரும் அங்குனுகோல அமிதானந்த தேரர் நடத்தி வந்த வாட்ஸ்அப் குழுவின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தாய்லாந்தில் தம்மா என அழைக்கப்படும் தம்மரக்கித்தா தேரர் இவர்களுக்கு தங்குமிடம் வழங்கியதும், பின்னர் போதைப்பொருள் அடங்கிய பெட்டியை அவர்களிடம் ஒப்படைத்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனுடன், அம்பகஸ்முல்லாவைச் சேர்ந்த புண்யரத்னா என்ற தேரர் இந்தக் கடத்தல் வலையமைப்பின் முக்கிய சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைக் கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புண்யரத்னா தேரர், சந்திரகுமார ஜெயலத் என்பவருடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. சந்திரகுமாரா 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளில், இந்தக் குழு இதற்கு முன்பும் 12 சூட்கேஸ்களில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு புண்யரத்னா தேரர் வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல விமான டிக்கெட்டுகளுக்காக புண்யரத்னா, சந்திரகுமாராவிற்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளார். அதில் 3.2 மில்லியன் ரூபாயை டிக்கெட் வாங்க பயன்படுத்திய சந்திரகுமாரா, மீதமுள்ள பணத்தில் போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் வீட்டையும் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தேரர்களுடன் தொடர்பு கொள்ள அங்குனுகோல அமிதானந்த தேரருக்கு 80,000 ரூபாய் வழங்கப்பட்டதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை