யாழ். பல்கலைக்கழகத்தில் சுடர்விட்டு எரிந்த முள்ளிவாய்க்கால் நினைவொளி!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திங்கட்கிழமை (மே 18), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் படுகொ*லை செய்யப்பட்ட எமது தொப்புள்கொடி உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் கம்பீரமாக அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏனைய நினைவுச் சுடர்களை ஏற்றி வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வின் போது, உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காகக் கண்ணீர் மல்க இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் விசேட ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மட்டுமன்றி, முன்னாள் போராளிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
அஞ்சலி நிகழ்வின் நிறைவில், இறுதிப் போர்க்காலப் பசித் துயரை நினைவூட்டும் வரலாற்றுச் சின்னமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





