இலங்கைத் தமிழர்களின் நீதிக்கு கனடா என்றும் ஆதரவு! – தமிழ் கனேடிய பிரதமர் மார்க் கார்னி உருக்கமான அறிக்கை!
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, கனடாவின் ஓட்டாவா – ஒன்றாரியோ பிரதம அலுவலகத்தில் இருந்து விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பேசியுள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி, “கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகங்களுடன் இணைந்து நாம் இன்று தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கிறோம்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. நாம் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றி, துன்பமடைந்த தமிழ் உறவுகளுக்கு என்றும் துணையாயிருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டுள்ள நாடுகளில் கனடா முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், “கடந்த 2022-ஆம் ஆண்டில் கனேடிய நாடாளுமன்றம் மே 18-ஆம் தேதியைத் ‘தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக’ ஒருமனதாக அங்கீகரித்தது, துயர்படிந்த வரலாற்றை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய படியாகும்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான சர்வதேச பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் கனடா தொடர்ந்து சர்வதேச அரங்கில் முழு ஆதரவை வழங்கும்” என உறுதியளித்துள்ளார். கனேடிய பிரதமரின் இந்த அறிக்கை உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




