யாழில் ஆலய நிகழ்வில் பெரும் கொடூரம்! – 150 தையல்களுடன் இளைஞன் உயிராபத்தான நிலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற ஆலய வேள்வி திருவிழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள், ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது அவர்கள் இருவருக்குமிடையே திடீரென வாய்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் எல்லை மீறி தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த ஒருவர் அருகில் இருந்த மதுப் போத்தலை உடைத்து, தனது நண்பன் என்றும் பாராமல் உடல் முழுவதும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட இளைஞனின் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்தப்பட்ட தீவிர அறுவைச் சிகிச்சையின் போது, உடலில் 150-க்கும் மேற்பட்ட தையல்கள் இடப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





