உன்னை பிடிக்கும், ஆனா உன் நடிப்பை பிடிக்காதுன்னு சொல்வார்! பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினி கண்ணீர் பேட்டி!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பாரதிராஜா என்னுடைய ஐம்பது ஆண்டுகால நண்பர்.
திரையுலகிற்கு எண்ணற்ற இயக்குநர்களையும், நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி, தன்னை வாழ வைத்த திரையுலகத்தையே வாழ வைத்தவர் அவர்.
யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் முதல் ஆளாகக் குரல் கொடுக்கும் போராளி” என நெகிழ்ந்தார்.
மேலும், பாரதிராஜாவின் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்துப் பகிர்ந்த ரஜினி, “அவர் மனதிற்குள் எதையும் மறைக்கத் தெரியாத ஒரு குழந்தை போன்றவர். என்னையும் அவர் பலமுறை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.
‘ரஜினி… உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனா உன் நடிப்பை எனக்குப் பிடிக்காது’ என்று என் முகத்திற்கு நேராகவே சொல்லும் தைரியம் அவருக்கு மட்டுமே இருந்தது.
அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது, அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்” எனத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
எம்.ஜி.ஆர், கலைஞர், சிவாஜி கணேசன் எனத் திரையுலக மற்றும் அரசியல் ஆளுமைகளுடன் மிக நெருங்கிய அன்போடு பழகியவர் பாரதிராஜா எனக் குறிப்பிட்ட ரஜினி, அவரது இறுதி நாட்களை நினைத்து மிகவும் வருந்தினார்.
“அவரை நேரில் வந்து பார்க்கட்டுமா என்று நான் கேட்டபோதெல்லாம், உடல்நிலை இன்னும் கொஞ்சம் சரியாகட்டும், பிறகு வரலாம் என்றே குடும்பத்தினர் கூறினார்கள். ஆனால், எனது அருமை நண்பனை கடைசி நேரத்தில் நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்டது” என மிகுந்த ஏக்கத்துடன் கூறினார்.
பாரதிராஜாவின் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் என்றும், அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்றும் கூறி ரஜினிகாந்த் தனது பேட்டியை நிறைவு செய்தார்.





