இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை – பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பாக பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணியாற்றிய 33 வயதுடைய ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கனடாவிற்கு செல்லும் நோக்கில் அவர் மற்றும் அவரது காதலன் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், திட்டமிட்டபடி வெளிநாடு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாததால் கடன் வழங்கியவர்கள் பணத்தை மீளக் கோரியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக, கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் இருந்த பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பின்னர், அந்தப் பெண்ணின் சடலம் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரிலிருந்து மீட்கப்பட்டது.
விசாரணைகளில், சடலத்தை காரில் கொண்டு வந்து கைவிட்டுச் சென்றவர் காதலனே என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கண்டி கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹோட்டலில் தங்கியிருந்த காலத்தில் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என உயிரிழந்த பெண் தனது சகோதரரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தலைமறைவாக உள்ள காதலனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. காதல் தொடர்பு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





