வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வடக்கு மாகாணத்தில், குறிப்பாக மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலி பயன்படுத்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு பயணிக்க வேண்டிய நிலை இருப்பதாக சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். இதனால், குறைந்தது தினமும் ஒரு மெட்ரோ பேருந்து சேவையாவது இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அடுத்த ஆண்டு முதல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதன்மூலம் வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவையை மேலும் வினைத்திறனாகவும், மக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.





