மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
மனித உரிமைகள் என்ற கருத்தை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்குள் மட்டும் சுருக்காமல், பொருளாதார, சமூக, மத, கலாசார, கல்வி, சுகாதாரம் மற்றும் காணி உரிமைகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைகளாகப் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற “Act Now – UNCOVER” புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் யுத்தம் மற்றும் சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், ஒதுக்கப்பட்ட சமூகங்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் வாழ்க்கை அனுபவங்கள் இந்தக் கண்காட்சியில் பிரதிபலிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய சஜித் பிரேமதாச, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு புதிய மற்றும் விரிவான பொருள் வழங்கப்பட வேண்டும் என்றும், அந்த மாற்றத்திற்காக நாட்டின் இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அழைப்பு விடுத்தார்.





