வத்தளை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபருக்கு உதவியதாக 24 வயது இளைஞர் கைது
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான, பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவை, முக்கலங்கமுவ பகுதியில் நேற்று (29) மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாடகைக் காரை பெறுவதற்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பரிமாற்றம் செய்து குற்றத்திற்கு உதவியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடபிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




