சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரித்தானியா – பிரான்ஸ் கூட்டு உடன்படிக்கை
இங்கிலாந்து கால்வாய் வழியாகச் சிறிய படகுகளில் சட்டவிரோதக் குடியேறிகள் வருவதைத் தடுக்க, பிரான்ஸ் நாட்டுடன் 662 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான புதிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் கீழ், கடற்கரைகளில் வன்முறை மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 50 விசேட கலகத் தடுப்புப் பொலிஸார் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும், ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு கருவிகள் மூலம் மனிதக் கடத்தல்காரர்களைக் கண்டறிய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இம்முறை முதன்முறையாக, பிரான்ஸ் போதிய அளவு படகுப் பயணங்களைத் தடுக்கத் தவறினால், சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் நிதியைத் திரும்பப் பெறும் புதிய நிபந்தனையை இங்கிலாந்து விதித்துள்ளது.
வரும் கோடையில் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 42 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 1,100 அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
2026-ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமானோர் எல்லை தாண்டியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அவசியமானது என அரசு கூறுகிறது. இருப்பினும், வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும், பாதுகாப்பான வழிகளே தீர்வு என மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன.




