சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்பட்ட பிரதமர் ரிஷி சுனக் சாதாரண செவிலியர் ஒருவரின் அதே வரி விகிதத்தை செலுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் ரிஷி சுனக் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
அதன்போது, அமெரிக்க நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ள ரிஷி சுனக் அதனூடாக கடந்த ஆண்டு 1.8 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக பெற்றுள்ளார்.
அத்தோடு, வட்டி மற்றும் ஈவுத்தொகையாக சுமார் 293,407 பவுண்டுகள் பெற்றுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் என்பதால் சம்பளமாக 139,477 பவுண்டுகளையும் பெற்றுள்ளார்.
அதன்படி, மொத்தமாக பெறப்பட்ட 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கும் வரியாக 22.8 சதவிகிதம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் சராசரியாக 41,604 பவுண்டுகள் சம்பளம் பெறும் ஆசிரியர் ஒருவர் செலுத்தும் வரி விகிதத்தையே பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ரிஷி சுனக்கும் செலுத்துகிறார் என்று தற்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
இது தொடர்பில் நிபுணர் ஒருவர் கூறுகையில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும், பிரதமர் இவ்வளவு குறைந்த வரி செலுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என தெரிவித்துள்ளார்.