டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
உலகின் 39 நாடுகளைச் சேர்ந்த மக்களின் புகலிடம், பணி அனுமதி, கிரீன் கார்டு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்திய குடியேற்றக் கொள்கை சட்டவிரோதமானது என அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் வொஷிங்டனில் இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடியேறி ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு காரணங்களை முன்வைத்து ஆப்கானிஸ்தான், ஈரான், ஹைட்டி, சோமாலியா, வெனிசுலா, சிரியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதில் முழுமையான மற்றும் பகுதி தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையால், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் சட்டப்பூர்வ குடியேற்ற விண்ணப்பங்கள் பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு எதிராக குடியேற்ற ஆதரவு அமைப்புகளும் தொழிலாளர் சங்கங்களும் ரோட் தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜோன் மெக்கொனல், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்து செய்து உத்தரவிட்டார்.
விண்ணப்பதாரர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டி அவர்களின் வாழ்க்கையை முடக்கிவைக்க அரசாங்கத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குடியேற்றத்திற்கு எதிரான உள்நோக்கத்துடனேயே இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.





