900 பயணிகளுடன் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்ட ஜெர்மனியின் ‘எம்.எஸ் அமடேயா’ பிரம்மாண்ட சொகுசு கப்பல்
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பலான ‘எம்.எஸ் அமடேயா’ (MS Amadea), தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை காலி துறைமுகத்தை வந்தடைந்தது.
பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இக்கப்பலில் 580 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 315 பணியாளர்கள் எனச் சுமார் 900 பேர் வருகை தந்துள்ளனர்.
கடந்த 2025 டிசம்பரில் ஜெர்மனியில் ஆரம்பமான இக்கப்பலின் 146 நாள் உலகளாவிய பயணத்தில், இலங்கை ஒரு முக்கியமான தரிப்பிடமாக அமைந்துள்ளது.
193 மீட்டர் நீளமும் எட்டு தளங்களையும் கொண்ட இக்கப்பலின் அனைத்து அறைகளும் கடல் காட்சியை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவிலான கப்பல் என்பதால், பெரிய கப்பல்கள் செல்ல முடியாத துறைமுகங்களுக்கும் செல்லும் வல்லமை கொண்டது இதன் சிறப்பம்சமாகும்.
இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் காலிக் கோட்டை, ஹிக்கடுவ, ருமசல மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளுக்குச் சென்று இலங்கையின் அழகை ரசிக்கத் திட்டமிட்டுள்ளனர்.




