சீனா எங்களுக்கு உதவவில்லை என்றால் இனி சீனா வரவே மாட்டேன் – டிரம்ப் எச்சரிக்கை
வரும் மார்ச் 31-ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது அந்தப் பயணத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலைச் சீர்செய்யவும், கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் சீனா இராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “சீனா தனது எரிசக்தித் தேவையில் 90 சதவீத எண்ணெய் விநியோகத்தை இந்த நீரிணை வழியாகவே பெறுகின்றது. எனவே, இந்தப் பாதையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சீனாவின் கடமையாகும்; இதற்கு அவர்கள் எமக்கு உதவ வேண்டும்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பயணத்தை ரத்து செய்வதன் மூலம் சீனாவுக்குப் பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியான அழுத்தங்களைக் கொடுக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே நேட்டோ நாடுகளுக்கும் அவர் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்குச் சீனா இதுவரை நேரடியான பதிலைத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





