இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படும்! — நெதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டைக் குறிவைத்துத் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இப்பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் நாடு வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்தத் தீவிரச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே அவசரத் தொலைபேசி உரையாடல் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அப்போது, ஈரானுக்கு எதிராக மீண்டும் எவ்விதப் பதில் தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என்று டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவிடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
“நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், இல்லையென்றால் மிக விரைவில் சர்வதேச அரங்கில் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்” என்று தான் நெதன்யாகுவிடம் எச்சரித்ததாக ட்ரம்ப் கூறியுள்ளதாக முக்கிய சர்வதேச செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், அவர் தனது தனிப்பட்ட விருப்பப்படியே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் அந்த அதிகாரி குறிப்பிடுகையில், “இஸ்ரேலில் அரசியல் ரீதியாகத் தனது பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில் நெதன்யாகுவுக்கு இந்தப் போர் தொடர்ந்து நீடிக்க வேண்டியுள்ளது;
ஆனால் அமெரிக்காவில் அரசியல் ரீதியாகத் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் டொனால்ட் ட்ரம்புக்கு இந்த மத்திய கிழக்குப் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டியுள்ளது” என இரு தலைவர்களின் சுயநல அரசியல் வியூகங்களை உடைத்துப் பேசியுள்ளார்.




