யாழ். பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுகிறது! : மாணவர் ஒன்றியப் பேச்சாளர் கவிதரன் கடும் எச்சரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தற்போது திட்டமிட்ட முறையில் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் முன்னெடுத்த பாரிய போராட்டத்தின் போதே அவர் இந்தக் கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை சார்ந்த விரிவுரைகள், எவ்வித எதிர்ப்பும் இன்றித் தன்னிச்சையாக ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் சிங்கள மாணவர்களை அதிகளவில் உள்வாங்கி, பல்கலைக்கழகத்தின் தமிழ் அடையாளத்தை அழிக்கும் ‘சிங்களமயமாக்கல்’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் பாரதூரமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகம் என்பது தமிழர்களின் மரபுரிமைச் சின்னம் மற்றும் பண்பாட்டுக் காவலரண் எனத் தெரிவித்த கவிதரன், மாற்றம் வேண்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் முன்னைய அரசுகளைப் போலவே மாணவர் உரிமைகளை நசுக்குவதாகச் சாடினார்.
முன்னைய ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்தச் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.





