நல்லூர் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேக தினம்! 1008 சங்காபிஷேகத்துடன் ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா
வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் கும்பாபிஷேகத் தினத் திருவிழா நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆலயத்தில் விசேட கிரியைகளும், மகா அபிஷேகப் பூஜைகளும் பக்திப் பூர்வமாகத் தொடங்கின.
இதன் முக்கிய நிகழ்வாக, நல்லூர் பெருமானுக்கு, அந்தண சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, மிக உன்னதமான 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டது.
இந்த மகா சங்காபிஷேகத்தைக் கண்டு தரிசிப்பதற்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூர் முன்றலில் திரண்டு கந்தனை வழிப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை வேளையில் மனதை உருக வைக்கும் விசேட வசந்தமண்டப பூஜை பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
பூஜைகள் நிறைவடைந்ததும், பேரெழில் வாய்ந்த அலங்காரத்தில் அருள்மிகு ஆறுமுக சுவாமி, வள்ளி தெய்வானை சமேதராய் உள்வீதி வலம் வந்து, பின்னர் நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க வெளிவீதியுலா வந்து அடியார்களுக்குக் காட்சியளித்தார்.





