எல்-நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!
எதிர்காலத்தில் இலங்கையை உலுக்கக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால், நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முறை ஏற்படவுள்ள எல்-நினோ பாதிப்பானது, கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வறட்சி நிலவரத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக, நாட்டின் தற்போதைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவை விவசாயம் மற்றும் குடிநீருக்காக மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்த விசேட நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை, திட்டமிட்ட காலத்திற்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எதிர்வரும் வறட்சி மாதங்களில் பொதுமக்களுக்குத் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் விவசாய உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மின் உற்பத்தி மற்றும் குடிநீர் பாதுகாப்பிற்கான இறுதித் திட்டங்களை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பேசிய ஜனாதிபதி, அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பாதிப்பு மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலையால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சவால்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டதைப் போன்றே, இந்த உலகளாவிய சுற்றுச்சூழல் சவாலையும் முறையான திட்டமிடல் மூலம் முகாமைத்துவம் செய்ய முடியும் எனப் பலத்த நம்பிக்கை வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





