இனவாதமற்ற கௌரவமான நாட்டை உருவாக்குவதே எமது இலக்கு! யாழில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
“எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற நாட்டை உருவாக்குவதே எமது நோக்கம்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருடத்தில் வரலாற்றிலேயே மிகக்குறைவான இனவாத மோதல்களே நடந்துள்ளன. இனவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகள் பலவீனமடைந்துள்ளன. எமக்குத் தேவை இனவாதமற்ற, தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே ஆகும்.
“வளமான நாடு” என்பது வெறும் கட்டிடங்களை மட்டும் குறிப்பதல்ல. மக்களுக்குச் சிறந்த வீடு, தரமான கல்வி, மேம்பட்ட சுகாதார சேவை மற்றும் இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான வளம்.
யாழ். மாவட்ட மக்கள் வரலாற்றில் முதன்முறையாகத் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையைச் சிறிதளவும் சிதைய விடமாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
அனைத்து கலாசாரங்களுக்கும் உரிய கௌரவம், மதிப்பு மற்றும் அங்கீகாரம் வழங்கப்படும் போதே ஒரு நாடு அழகாகும். அந்த அழகிய இலங்கையை நாம் கட்டியெழுப்புவோம்.
“நாம் பிரியாதிருப்போம், நாம் ஒன்றுபடுவோம், சிறந்த நாட்டை எமது மக்களுக்காக உருவாக்குவோம்” என்ற ஜனாதிபதியின் அழைப்பு அங்கிருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கே.இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா உள்ளிட்ட பாதுகாப்புப் படைத் தலைவர்களும், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





