எதிர்கால எரிபொருள் விலை திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வதேசச் சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலைகள் அதிகரித்துள்ளதால் எரிசக்தித் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாயாக இருந்தபோதிலும், அரசாங்கம் 100 ரூபாய் மானியம் வழங்குவதால் மக்கள் அதனை 382 ரூபாய்க்குப் பெற முடிகிறது என அவர் விளக்கமளித்தார்.
இந்த மானியத்தைத் தக்கவைக்க அரசாங்கம் 60 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உலகச் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், எதிர்காலத்தில் சிறிய அளவிலான எரிபொருள் விலை திருத்தங்கள் தேவைப்படலாம் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்தார்.
அதேநேரம், மின்சாரத் துறையில் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்மட்டம் குறைவால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையிலும், 96 சதவீத மின் நுகர்வோருக்குக் கட்டண அதிகரிப்பு இன்றி மானியம் வழங்க 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குப் பாரிய சுமை ஏற்படாத வகையில் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கத் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சூளுரைத்தார்.




