பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!
மேல் மாகாண பாடசாலைகளில் பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமையினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் நாளையும், நாளை மறுதினமும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மேல்மாகாண பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணையின் விஞ்ஞான பாட வினாத்தாள் அண்மையில் நடைபெற்றதுடன், அந்த பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்திருந்தது.
அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த கணிதப் பாடத்தின் வினாத்தாளும், பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது.
இந்தநிலைமையை கருத்திற்கொண்டு மேல்மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த 10 ஆம் மற்றும் 11ஆம் தரங்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இதற்கமைய, கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான முதலாம் பாகத்திற்கான பரீட்சை நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பகுதி இரண்டிற்கான பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த ஆங்கில மொழிப் பரீட்சையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.