இயேசுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய ட்ரம்ப்! கிளம்பியது புதிய சர்ச்சை
வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அண்மையில் நடைபெற்ற ஈஸ்டர் பெருவிழாவில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“குருத்தோலை ஞாயிறன்று இயேசு ஜெருசலேமுக்குள் நுழைந்த போது மக்கள் அவரை ராஜாவாகக் கொண்டாடியது போல, தற்போது என்னையும் மக்கள் ராஜாவாகவே கொண்டாடுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கு சென்றாலும் மக்கள் தன்னை ‘ராஜா’ என அன்போடு அழைப்பதாகவும் அவர் இதன்போது சிரித்தபடி குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்தக் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய வெள்ளை மாளிகையின் ஆன்மீக ஆலோசகர் பவுலா வைட் கெய்ன், “இயேசு கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாடங்களைக் கற்பித்தது போல, ஜனாதிபதி ட்ரம்பும் செயல்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ (No Kings) என்ற தலைப்பில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ட்ரம்ப் தன்னை ஒரு ராஜா என விவரித்துள்ளது அரசியல் மற்றும் மத ரீதியிலான மோதல்களைத் தூண்டியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுச் சில மணிநேரங்களிலேயே நீக்கப்பட்டது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வருவதால், ட்ரம்பின் பேச்சு ‘கடவுள் அவமதிப்பு’ செயல் எனப் பல கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.





