திரையரங்குகளிலும் தொலைகாட்சிகளிலும் விஜய் படங்கள் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் – வெளியாகிய தகவல்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்த திரைப்படங்களைத் திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் செய்யது பாபு தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்யின் திரைப்படங்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்தத் தடையைக் கோருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, விஜய்யின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் அனைத்துத் திரையரங்குகளிலும் திரையிடப்படுவதாகவும், அதற்கான பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்யது பாபு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முடியும் வரை இந்த விளம்பரப் பலகைகளை அகற்றவும், திரைப்படத்தின் விளம்பரங்களை முடக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி மூலம் முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், அவருக்குக் கிடைத்து வரும் மக்கள் ஆதரவு மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது திரைப்படங்களை முடக்கக் கோரி காங்கிரஸ் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.





