எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம்
“யாமார்க்கும் குடியல்லோம்” எனும் கருப்பொருளில் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மே தின எழுச்சி நிகழ்வில் உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
லெனினையும் மார்க்ஸையும் முன்னிறுத்திப் பேசும் இந்த புதிய அரசு, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என அவர் சாடினார்.
பழைய அரசியல் கலாசாரமே புதிய உருவில் தொடர்வதாகவும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் இன்றும் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழ் நிலங்கள் இன்றும் படையினர் வசமே உள்ளன என்றும், விளைநிலங்களில் விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்வதாகவும் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் வீரியமாக உள்ள நிலையில், தமிழ் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் நலிந்து போயுள்ளதாக கவலை வெளியிட்ட அவர், “எம்மை நாமே ஆள வேண்டும்” என்பதே காலத்தின் கட்டாயம் என அதிரடியாகப் பிரகடனம் செய்தார்.



