கைப்பற்றிய இடங்களை விட்டு நகர மாட்டோம்! – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்கா முன்னெடுத்த 10 நாள் தற்காலிகப் போர்நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. இருப்பினும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றிய மற்றும் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எந்தவொரு பகுதியிலிருந்தும் படைகள் பின்வாங்காது என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
“இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலைகளையும் தொடர்ந்து தக்கவைப்போம்” என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் அல்லது இராஜதந்திர ரீதியாக ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதே (Disarm) இஸ்ரேலின் பிரதான இலக்கு என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி ஈடுபாடும், லெபனான் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களும் ஒரு “வலிமையான இராஜதந்திர கருவியாக” பயன்படுத்தப்படுவதாக காட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
1,700-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எல்லைக் கிராமங்களில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகளைத் தகர்க்கும் வரை நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.




