ஈரான் விவகாரத்தில் நான் சாதித்து விட்டேன் – பாராட்டுவதற்கு உங்களுக்கு மனமில்லை! – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் விவகாரத்தில் தனது நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளைச் சர்வதேச ஊடகங்கள் விமர்சன ரீதியாக அணுகுவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குறிப்பாக இரண்டு முக்கிய சர்வதேச செய்தி நிறுவனங்கள் தன்னைத் திட்டமிட்டுத் தாக்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நெருங்கியுள்ள போதிலும், அதனைப் பாராட்ட ஊடகங்களுக்கு மனமில்லை என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
தன்னைக் குறை கூற ஒரு காரணத்தைத் தேடி ஊடகங்கள் திணறுவதாக எள்ளி நகையாடியுள்ள ட்ரம்ப், தனது சாதனைகளை அங்கீகரித்து “மிஸ்டர் பிரசிடெண்ட், மிகச் சிறந்த பணி” (Job Well Done, Mr. President) என்று ஊடகங்கள் கூற முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலமே அந்த ஊடகங்கள் இழந்த தங்களது நம்பகத்தன்மையை மீண்டும் பெற முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறி வரும் நிலையில், ஊடகங்கள் எழுப்பும் சந்தேகங்கள் அவரைப் பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளதையே இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.





